இலங்கை சிறையில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 20 தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்பட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு வடக்கு மத்திய மாகாணமான அனுராதாபுரம் சிறையில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 23 தமிழர்களை சிறையில் இருந்து விடுவிக்க சிறிசேனா அரசு உத்தரவிட்டது.
மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் வரவேற்பு தெரிவித்தது. அதே சமயம் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் தாமதம் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 20 தமிழர்கள் தங்களையும் விடுதலை செய்யக் கோரி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் உறவினர்களை சந்திக்க வசதியாக தங்கள் மீதான வழக்கு விசாரணையை தமிழர்கள் அதிகம் வசிக்கும் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் மாற்றுவது குறித்து அனுராதாபுரம் சிறைத் துறை அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.