மவுண்ட் எவரெஸ்ட்டில் இருந்த ஹிலாரி ஸ்டெப் என்ற 12 மீட்டர் நெடும்பாறை தற்போது இல்லை என்று எவரெஸ்ட் மலையேற்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட செங்குத்தாக இருக்கும் இந்த 12மீ பாறை அமைப்புக்கு எவரெஸ்ட் சிகரத்தை 1953-ம் ஆண்டு முதன் முதலில் எட்டிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டு ‘ஹிலாரி ஸ்டெப்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
எவரெஸ்ட் சிகரத்தை எட்ட வேண்டுமெனில் இந்தப் பாறையை ஏறிச்செல்வது மிகக் கடினம். உச்சியை எட்டுவதற்கு முன் மலையேற்ற வீரர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயகரமானத் தடை இந்த ஹிலாரி ஸ்டெப் என்று கருதப்படுகிறது. இந்தப் பாறை 2015-ல் நேபாளத்தை ஆட்டிப்படைத்த பெரிய பூகம்பத்தில் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நெடும்பாறையை கயிற்றின் உதவியினால்தான் ஏறிக் கடக்க முடியும்.
பிரிட்டனைச் சேர்ந்த மலையேற்ற வீரர் டிம் மோஸ்டேல் கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இவர்தான் ஹிலாரி ஸ்டெப் தற்போது இல்லாததை அறிவித்தார்.
இது குறித்து தி கார்டியனில் அவர் கூறும்போது, “நான் கடந்த ஆண்டு ஹிலாரி ஸ்டெப்பை ஏறிக் கடந்தேன் என்று சிலர் கூறினர், ஆனால் அப்போது பெரிய அளவில் பனி மூடியிருந்ததால் என்னால் அது ஹிலாரி ஸ்டெப்தான் என்று கண்டுணர முடியவில்லை. ஆனால் உறுதியாகக் கூறுகிறேன் தற்போது ஹிலாரி ஸ்டெப் இல்லை” என்றார்.
மேலும் இமாலயத்தில் இடங்கள் பல்வேறு விதமாக மாற்றமடைந்து வருகிறது என்று அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிலாரி ஸ்டெப் அங்கு இல்லை என்று கூறப்பட்டு வந்தாலும் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ஹிலாரி ஸ்டெப் இல்லை என்பது எவரெஸ்ட்டுக்கான பாதையை ஓரளவுக்கு எளிதாக்கி விடும் என்று மலையேற்ற வீரர்கள் கூறினாலும், இன்னும் கடினமான பாதையே தற்போது இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஏனெனில் ஹிலாரி ஸ்டெப் இல்லாததால் பெரிய அளவில் உறுதியற்ற பாறைகள் உள்ளன, எனவே இதன் வழியாக எவரெஸ்ட்டை அடைவது ஆபத்தானதாக இருக்கும் என்று வேறு சில நிபுணர்கள் கருதுகின்றனர்.