பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்கவா மாகாணம் பெஷாவரில் கான் ரஜிக் காவல் நிலையம் அருகே கிஸா கவானி பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடித்து சிதறியது. காரில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதலில் 225 கிலோ எடைகொண்ட வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்த 6 கார்கள், 19 கடைகள் மற்றும் பைக்குகள், ஆட்டோக்கள் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல்
வசிரிஸ்தான் பகுதியில் தர்கா மண்டி என்ற இடத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது அமெரிக்காவின் சிஐஏ-வுக்கு சொந்தமான உளவு விமானம் ஞாயிற்றுக்கிழமை 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.