அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா எந்த வகையிலும் தலையிடவில்லை என்று புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்தப் பின்னணியில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை திரைமறைவு செயல்களில் ஈடுபட்டது என்று தற்போதைய அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சில ரஷ்ய உளவு அமைப்புகளுக்கு அவர் தடை விதித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய 35 அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் சீனா ஸ்பைசர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறை திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இதை ஊடகங்கள் மிகைப்படுத்தி எழுதுகின்றன என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஒபாமா கடைசி நேரத்தில் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்வார் என்று தெரிகிறது. குறிப்பாக ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.