பிரிட்டிஷ் பிணைக்கைதி ஆலன்ஹென்னிங்கை ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தலையை துண்டித்து கொலை செய்யும் இன்டெர்நெட் வீடியோ காட்சி நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட 4-வது மேற்கத்திய நாட்டவர் ஆலன் ஹென்னிங்.
இந்த வீடியோ காட்சியில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மற்றொரு அமெரிக்க பிணைக் கைதி பீட்டர் காஸ்ஸிக் என்பவரை தீவிரவாதி ஒருவர் மிரட்டுவது போன்ற பதிவும் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஆலன் ஹென்னிங் அருகில் நிற்கும் முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவர், “ஒபாமா, சிரியா வில் வான்வழித் தாக்குதலை தொடங்கி விட்டீர்கள். இதன் மூலம் எங்கள் மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். எனவே உங்கள் மக்களை கழுத்தை அறுத்துக் கொல்வதே எங்களுக்கு இருக்கும் ஒரே உரிமை” என்று கூறுவது பதிவாகியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் செய்திகளை திரட்டிவந்த அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப்ட், பிரிட்டன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் இதற்கு முன் தலை துண்டித்து படுகொலை செய்தனர்.
இதனிடையே 10 மாதங்களுக்கு முன், வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் (47), சிரியா வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு வழிகாட்டு வதற்காக சென்றபோது 10 ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
கண்டனம்
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்தக் கொடூர செயலுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், “பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவுவதற் காகவே சிரியாவுக்கு ஆலன் சென்றார். அவர் கொல்லப்பட்டது, ஐ.எஸ். தீவிரவாதிகள் எத்தகைய கொடூர மனம் படைத்தவர்கள் என்பதை காட்டுகிறது. இந்தக் கொலைக்காரர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்” என்று கூறியுள்ளார்.
ஆலன் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்கு கூட்டணிப் படையினரின் உறுதியான நடவடிக்கையை தொடருவோம் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை, வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவற்றை கடைபிடிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் வலியுறுத்துகிறது ” என்று கூறப்பட்டுள்ளது.