உலகம்

மலேசியாவில் பைபிள் பறிமுதலால் சர்ச்சை

செய்திப்பிரிவு

கிறிஸ்தவ குழுவினரிடம் இருந்து நூற்றுக்கணக்கான பைபிள்களை, மலேசிய இஸ்லாமிய அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பைபிள்களில் ‘அல்லா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்ததே பறிமுதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மலேசிய கத்தோலிக்க பத்திரிக்கை ஒன்று தனது மலாய் மொழி பதிப்பில், கிறிஸ்தவ கடவுளை குறிப்பதற்கு ‘அல்லா’ என்ற வார்த்தையை பயன்படுத்த, மலேசிய நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு பழமைவாத முஸ்லிம்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் இத்தீர்ப்புக்கு தங்கள் கவலையை தெரிவித்தனர்.

இதையடுத்து கிறிஸ்தவர்களின் மத வழிபாட்டு சுதந்திரத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என்று பிரதமர் நஜீப் ரசாக் உறுதியளித்தார். இந்நிலையில், மலேசியாவின் செலங்கோர் மாநில அதிகாரிகள், மலேசிய பைபிள் சங்கத்தின் 300க்கும் மேற்பட்ட பைபிள்கள் கொண்ட 16 பெட்டிகளை நேற்று பறிமுதல் செய்ததாக இச் சங்கத்தின் தலைவர் லீ மின் சூன் தெரிவித்தார்.

“முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லா’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கும் மாநில சட்டத்தின் கீழ் சங்க நிர்வாகிகள் இருவரை போலீஸார் பிடித்துவைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை விடுவித்தனர். என்றாலும் அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர்” என்றார் லீ மின் சூன்.

SCROLL FOR NEXT