அமெரிக்காவில் வசிக்கும் லின் ஸ்லேட்டர், பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். சில ஆண்டு களுக்கு முன்பு நியூயார்க் பேஷன் ஷோவில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். உணவு இடைவேளை நேரம் என்பதால் அவரை வெளியில் காத்திருக்கச் சொன்னார்கள். அப்போது இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்கள் வந்து, சில கேள்விகளைக் கேட்டனர். புகைப்படங்கள் எடுத்தனர். லின்னின் நளினமான உடை, கைப்பை, அலங்காரம் போன்றவற்றைப் பார்த்து மாடல் என்று தவறாக நினைத்துவிட்டனர். “ஜப்பானியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே என்னைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பேஷன் உலகில் நான் மிக முக்கியமான நபர் என்று நினைத்திருக்கிறார்கள். எனக்கு விஷயம் புரிவதற்குள் பல்வேறு கேமராக்களில் படங்களை எடுத்துத் தள்ளிவிட்டனர். இப்படித்தான் பேஷன் துறைக்குள் எதிர்பாராமல் நுழைந்தேன். ஜனவரியில் எலைட் லண்டன் நிறுவனம் என்னுடைய ஸ்டைலை பார்த்து மாடலிங் வாய்ப்பு வழங்கியது. அதற்குப் பிறகு பல சர்வதேச நிறுவனங்களிடம் மாடலாக பணியாற்றிவிட்டேன். வயதானவள் என்பதால் இதை அணியாதே, அதைச் செய்யாதே என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டேன். எனக்கு எது வசதியாகத் தோன்றுகிறதோ, நான் எதை அழகாக நினைக்கிறேனோ அப்படித்தான் ஆடைகளை அணிவேன், அலங்காரம் செய்துகொள்வேன். வயது ஒரு நாளும் என் முடிவுகளுக்கு தடையாக இருக்க முடியாது. புதிய ஆடைகளை உருவாக்கி அணியும் ஒவ்வொரு முறையும் மிக இளமையாக உணர்கிறேன்” என்கிறார் லின் ஸ்லேட்டர். இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது ‘ஆக்சிடெண்ட்டல் ஐகான்’ என்ற பெயரில் ஒரு பிளாகை நடத்தி, எல்லா வயதினரும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று எழுதி வருகிறார்.
63 வயதில் மாடலிங் உலகைக் கலக்கும் பேராசிரியர்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயது பஸ்கல் பிச் புகழ்பெற்ற விளையாட்டு வீரர். பல்வேறு சாதனைகளைக் கையில் வைத்திருக்கிறார். ஓரிடத்தில் இருந்தபடி பாரிஸ் முதல் மாஸ்கோ வரையிலான தூரத்தை ஸ்டேஷனரி (ஓரிடத்தில் இருக்கும்) சைக்கிள் மூலம் கடந்திருக்கிறார். மிக நீண்ட தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் கடந்திருக்கிறார். “ஓரிடத்தில் இருந்தபடி சைக்கிள் ஓட்டி 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை 6 நாட்களில் கடந்திருக்கிறேன். இது பாரிஸுக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான தூரத்துக்கு சமம் ஆகும். ஒரு நாளைக்கு 600 கி.மீ. தூரம். இடையில் 3 மணி நேரம் தூங்குவேன். கடந்த ஆண்டு 2,878 கி.மீ. தூரத்தை 6 நாட்களில் கடந்து சாதனை செய்தேன். அந்த சாதனையை முறியடிப்பதற்காகவே இப்போது இறங்கினேன். சாதாரண சைக்கிளை இயக்குவதற்கும் இந்த சைக்கிளை இயக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெப்பம், காற்று, மோசமான பாதை உள்ளிட்ட பிரச்சினை இல்லாததால் இயக்குவதற்கு எளிதாக இருக்கும். ஆனால் ஓரிடத்திலிருந்தபடியே ஓட்ட வேண்டும் என்பதால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். 15 வயதில் விளையாட ஆரம்பித்தேன். டிரையத்லான் போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தினேன். அதற்குப் பிறகு இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்” என்கிறார் பஸ்கல்.
ஓரிடத்திலிருந்தபடி பாரிஸிலிருந்து மாஸ்கோ சென்ற வீரர்!