உலகம்

வங்கதேசத்தில் பெண் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிடிஐ

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒரு பெண் உட்பட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சிட்டகாங் நகரில் சுமார் 20 வீடுகள் கொண்ட ஒரு கட்டிடத்தில், தீவிரவாதிகள் சிலரும் வசிப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை பாதுகாப்பு படையினர் புதன் இரவு சுற்றி வளைத்து அதிரடி சோதனை தொடங்கினர். இதில் ஒரு வீட்டில் இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டதுடன் கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதையடுத்து மற்ற குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நேற்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் 2 தீவிரவாதிகள் உடலில் பொருத்தியிருந்த குண்டு வெடித்தும், ஒரு பெண் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டும் இறந்ததாக போலீஸார் கூறினர்.

இந்த நடவடிக்கையில் 3 போலீஸார் காயம் அடைந்தனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள், ‘நியோ ஜமாதுல் முஜாகிதீன் பங்களாதேஷ் (நியோ ஜேஎம்பி)’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016, ஜூலை 1-ம் தேதி ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓர் இந்தியர் உட்பட 22 பேர் இறந்தனர். இத்தாக்குதலுக்கு, ஐஎஸ் சார்பு அமைப்பான நியோ ஜேஎம்பி பொறுப்பேற்றது.

வங்கதேசத்தில் மதச்சார்பற்றோர், சிறுபான்மையினர், மற்றும் வெளிநாட்டினருக்கு எதிராக தாக்குதல்கள் கடந்த 2013 முதல் அதிகரிக்கத் தொடங்கின. தீவிரவாதிகளுக்கு எதிராக வங்கதேச அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக டாக்கா ஹோட்டல் தாக்குதலுக்கு பிறகு இந்த நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

SCROLL FOR NEXT