பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கை நேரில் சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நடவடிக்கைக் குழு (சிஎம்ஏஜி) கூட்டம் லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சல்மான் குர்ஷித் லண்டன் சென்றிருந்தபோது, ஹேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ஹேக் கூறியதாவது:
காமன்வெல்த் வாரத்தை முன்னிட்டு இங்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா-பிரிட்டன் இடையிலான நட்புறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இருதரப்பின் இலக்குகளை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இருதரப்பு விஷயங்கள் மட்டுமல்லாது தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் நிலவும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பரிமாறிக்கொள்வது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது என ஹேக் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்றியமைப்பது, மத்தியக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் இந்த வார தொடக்கத்தில் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.