மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 1.20 மணியளவில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது.
அதன்பின்னர் காலை 8.11 மணிக்கு பிரிட்டனின் இன்மர்சாட் தனியார் செயற்கைக்கோளில் விமானத்தின் சிக்னல் கிடைத்துள்ளது. ஆனால் எந்த இடத்தில் விமானம் பறந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து முதல் கஜகஸ்தான் வரையும் இந்தோனேசியா முதல் அந்தமான் கடல் பகுதி வரையும் பரந்துவிரிந்த பகுதியில் தேடுதல் பணி நடைபெற்றது.
இதனிடையே பிரிட்டன் விமான விபத்து விசாரணை பிரிவுடன் (ஏ.ஏ.ஐ.பி.) இணைந்து இன்மர்சாட் செயற்கைக்கோள் நிறுவன இன்ஜினீயர்கள் “டோப்லர் விளைவு” கணக்கீட்டைப் பின்பற்றி விமான மர்மத்துக்கு விடை காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 வாரங்களுக்கும் மேலாக கணக்கிட்டு கடைசியாக காலை 8.11 மணிக்கு பதிவான சிக்னலின்படி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு தெற்கே நடுக்கடலில் விமானம் பறந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டது.
விமானத்தில் 8 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
இன்மர்சாட் சுட்டிக் காட்டிய கடல்பரப்பில் இருந்து சுமார் 5 மணி நேரம் பறந்தால் மட்டுமே நிலப்பரப்பை வந்தடைய முடியும். எனவே எரிபொருள் காலியாகி விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் விவரங்களைக் கோரும் சீனா
பிரிட்டனின் இன்மர்சாட் செயற்கைக்கோள் அளித்த கணித விவரங்களை அளிக்கும்படி சீன அரசு கோரியுள்ளது. ஆரம்பம் முதலே மலேசிய அரசு பல்வேறு உண்மைகளை மறைப்பதாக மூத்த சீன ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆதாரம் எங்கே?: சென்னை பெண்ணின் சகோதரர் கேள்வி
பெய்ஜிங் விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரம் எங்கே என்று பயணிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையில் தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் விழுந்து மூழ்கிவிட்டது, யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். இதற்கு விமான பயணிகள் அனைவரும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்த சென்னை பெண் சந்திரிகா சர்மாவின் சகோதரர் விமல் சர்மா கூறியதாவது: விமானத்தின் சிறு பாகம்கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைக்கவில்லை. ஏதாவது ஆதாரம் இருந்தால் மட்டுமே நம்ப முடியும்.
செயற்கைக்கோளில் மர்ம பொருள்கள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நானும் ஒரு மாலுமிதான். சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய கடற்பகுதி வழியாக பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். அந்தப் பகுதி முழுவதும் குப்பை கூளமாக பொருள்கள் மிதக்கும். வெறும் செயற்கைக்கோள் படங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்று அவர் ஆவேசத்துடன் கூறினார்.
தேடும் பணி நிறுத்தம்
ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் வானிலை மோசமடைந்துள்ளது. இதன்காரணமாக மலேசிய விமானத்தை தேடும் பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கறுப்புப் பெட்டி கிடைத்தாலும் விடை கிடைக்காது:
விமானம் மாயமாகி செவ்வாய்க்கிழமையுடன் 18 நாள்கள் ஆகிவிட்டன. இன்னும் 12 நாள்களுக்குள் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் அதனைத் தேடுவது மிகவும் கடினமாகிவிடும்.
விமானம் விழுந்ததாகக் கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதி சுமார் 23 ஆயிரம் அடி ஆழம் கொண்டதாகும். அதை கணக்கில் கொண்டு 23 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்தாலும் கறுப்புப் பெட்டியின் சிக்னலை கண்டறியும் கருவியை அமெரிக்க கடற்படை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்மூலம் தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
மலேசிய விமானம் வியட்நாம் எல்லையில் பறந்தபோது விமானி அல்லது பயணிகளில் யாரோ ஒருவரால் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது.
அதன்பின்னர் விமானம் சுமார் 5 மணி நேரம் வரை பறந்துள்ளது. கடைசி 2 மணி நேர உரையாடலை கேட்க முடியும் என்பதால் வியட்நாம் எல்லையில் விமானம் திசை திருப்பப்பட்டபோது விமானி அறையில் என்ன பேசப்பட்டது என்பதை அறிய முடியாது. எனவே கறுப்புப் பெட்டி கிடைத்தாலும் விமானத்தின் மர்மங்களுக்கு விடை காண்பது கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.