உலகம்

தாய்லாந்தில் வேட்பாளர் பதிவு மையம் முற்றுகை

செய்திப்பிரிவு

தாய்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரைப் பதிவு செய்வதற்கான மையத்தை அரசு எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சிகள் வரும் 27-ம் தேதிக்குள் வேட்பாளர்களின் பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் உள்ள தாய்-ஜப்பானிய விளையாட்டு மைதானத்தில் இதற்கான பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், அரசு எதிர்ப்பாளர்கள் அந்த விளையாட்டு மைதானத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் மைதானத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், ஆளும் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவதற்கு முன்பே (அதிகாலை 4 மணி அளவில்) உள்ளே சென்றுவிட்டதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நொப்பாரிட் தெரிவித்தார்.

திங்கள்கிழமை காலை வரையில், விளையாட்டு மைதானத்தில் 9 கட்சிகளும், டாயங் காவல் நிலையத்தில் 26 கட்சிகளும் என மொத்தம் 35 அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை சமர்ப்பித்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் பதிவு நடைபெற்ற காவல் நிலையத்தையும் நூற்றுக் கணக்கானோர் முற்றுகையிட்டனர்.

பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்த பிரதமர் பிப்ரவரி 2-ல் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். ஆனாலும், ஷினவத்ரா இடைக்கால பிரதமராக நீடிக்கக் கூடாது என்றும், அவர் உடனடியாக பதவி விலகிய பின் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT