இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் அவரின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவயானிக்கு, தூதரக ரீதியான முழு சட்டப் பாதுகாப்பு ஜனவரி 8-ம் தேதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி அவர் இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், தன் மீதான விசா மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் தேவயானி கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் சார்பில் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
“தேவயானி மீதான விசா மோசடி வழக்கை ரத்து செய்ய கோரி முறைப்படி இந்த மனுவை தாக்கல் செய்துள் ளேன். அவருக்கு தூதரக ரீதியான சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதிலிருந்து அவருக்கு விதிவிலக்கு உள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்த போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நீக்க வேண்டும். நீதிமன்றத்திடம் உள்ள அவரின் பாஸ்போர்ட்டை திருப்பித் தர வேண்டும்.
அவர் மீதான வழக்கை ரத்து செய்வதுடன், எதிர்காலத்தில் கைது வாரண்ட் எதையும் பிறப்பிக்கக் கூடாது. அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் படி இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கக் கூடாது. பொதுவாக தூதரக ரீதியி லான பாதுகாப்பை விலக்கும் உரிமை, அந்த தூதரின் சொந்த நாட்டுக்குத்தான் உள்ளது. அது போன்ற பாதுகாப்பு இருக்கும் வரை, தூதர் மீது குற்றம் தொடர் பாக சட்டரீதியான நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தனது மனு தொடர்பாக ஜனவரி 31-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். தேவயானியின் இந்த கோரிக்கை குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞரான பிரீத் பராராவிடம் கேட்டபோது, “அந்த மனு தொடர்பாக இப்போதைக்கு கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்திய தூதருடன் அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் சந்திப்பு
இதற்கிடையே பொது நிகழ்ச்சியொன்றில் அமெரிக்கா வுக்கான இந்திய தூதர் ஜெய் சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வில்லி யம் ஜெ.பர்ன்ஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் தேவயானி விஷயத்தை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். தூதரக ரீதியான விவகாரங்களை விரைவில் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என பர்ன்ஸ், ஜெய்சங்கர் இடையி லான சந்திப்பின்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
முன்னதாக அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் தலைவர் ஜான் போய்னரை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதுவரை 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை அவர் சந்தித்து பேசியுள்ளார். விசா தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாகவும், தேவயானி கைது விவகாரம் குறித்தும் அவர்களுடன் ஜெய் சங்கர் பேசினார்.