உலகம்

காணாமல் போன விமானம்: மலேசியா, அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மலேசிய விமானம் காணாமல் போன விவகாரத்தில், அமெரிக்காவும் மலேசியாவும் போதுமான விவரங்களைக் கொடுக்காமல் காலத்தை வீணடித்து வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

காணாமல் போன மலேசிய விமானத்தில் 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் 154 பேர் சீனர்கள். இதனால், விமானம் காணாமல் போன விவகாரத்தில் சீன மக்களின் நெருக்குதலை சீன அரசு சந்தித்து வருகிறது.

விமானம் காணாமல் போனது தொடர்பாக முறையான தகவல் கிடைக்காததால், தேடும் பணியில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள சீனா இவ்விவகாரத்தில் மலேசியா மற்றும் அமெரிக்காவைக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்குவா செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிப்படையான தகவல்களை அளிக்காமல் மலேசியாவும், அமெரிக்காவும் காலத்தை வீணடித்து வருகின்றன. விரிவான விவரங்களை அளிக்காமல் இருப்பதும், விவரங்கள் கிடைப்பதில் தாமதமாவதும் வேதனை அளிக்கக்கூடிய விஷயங்களாகும். ஒருவாரத்துக்கும் அதிகமாகிவிட்ட நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் வேதனை அதிகமாகியுள்ளது.

உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ மான தகவல் கிடைக்காமல் இருப்பது அல்லது தாமதமாகக் கிடைப்பது விமானத்தைத் தேடு வதற்கு மேற்கொள்ளும் பெரு முயற்சியை வீணடிப்பதாகும். ஏராளமான வதந்திகள் பரவி விட்டன. அவை, காணாமல் போனவர்களின் குடும்பத்தை மேலும் பதற்றமடையச் செய்கின்றன. இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளை வைத்துக் கொண்டு, தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.

சர்வதேச தேடுதல் வேட்டைக்கு பொறுப்பேற்றுள்ள நாடு என்ற முறையில், மலேசியாவுக்கு தப்பித் துக் கொள்ள முடியாத பொறுப்பு உள்ளது. விமானத்தை வடிவமைத்த போயிங், என்ஜினை வடிவமைத்த ரோல்ஸ்ராய்ஸ், புலனாய்வுத் துறையில் கெட்டிக்காரத்தனமான அமெரிக்கா உள்ளிட்டவை சிறந்த பணியாற்ற வேண்டும்.

காலம் கடந்து கொண்டிருக்கின்ற இச்சூழலில், மாயமான விமானம் குறித்து தகவல் கிடைக்காமல் இருப்பது பெரும்புதிரான ஒன்று. மலேசியத் தரப்பிலும், தகவல் பகிர்வில் அமெரிக்கா தரப்பிலும் இன்னும் வெளிப்படையான ஒத்துழைப்புத் தேவை என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் ஜின் காங் கூறுகையில், “மலேசியா முழுமையான மற்றும் சரியான தகவல்களைத் தர வேண்டும். சீன தொழில்நுட்ப நிபுணர்கள் விசாரணையில் உதவுவதற்காக மலேசியா சென்றுள்ளனர்” என்றார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், “விமானத்திலிருந்து தகவல் சமிக்ஞைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டபின், வெவ்வேறு பாதைகளில் விமானம் 7 மணி நேரம் பறந்திருக்கிறது” என சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மலேசிய பிரதமரின் இக்கருத்துக்குப் பின்னரே, மேற்கண்டவாறு சீனா தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

நாங்கள் ஒளித்து வைக்கவில்லை: பாகிஸ்தான்

காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் ஒளித்து வைக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்ற விமானம் காணாமல் போனது. இந்த விமானம் பாகிஸ்தானில் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் விமானப் போக்குவரத்து சிறப்பு அதிகாரி சுஜாத் அசீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து வெகு தொலைவில் விமானம் மாயமாகியுள்ளது. எங்கள் ரேடார்களில் இந்த விமானம் காணப்படவில்லை. எனவே இதை பாகிஸ்தான் ஒளித்துவைக்க வாய்ப்பே இல்லை" என்றார்.

SCROLL FOR NEXT