தனக்கு எதிரான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை தென்கொரியாவில் உள்ள சிலர் வெளியிட்டதால், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரிய எல்லையில், அந்நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்ட பலூன்களை தென்கொரியாவில் உள்ள பல்வேறு அமைப்பினர் நேற்று முன்தினம் பறக்கவிட்டனர். அதோடு, துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டனர்.
வானில் பறந்த பலூன்களை வீழ்த்த வடகொரிய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடியாக தென்கொரிய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த பரஸ்பர தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.
இந்நிலையில் வடகொரியாவில் செயல்படும் அரசு சார்பு இணையதள செய்தி நிறுவனமான உரிமின்ஜோக்கிரி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: “இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தைக் கூட்டங்கள் நடைபெறாது. தென்கொரிய அரசின் பொறுப்பற்ற செயல்பாடுகளையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இரு நாடுகளின் உறவை முன்னெடுத்துச் செல்வதா, வேண்டாமா என்பது தென்கொரியாவின் கையில்தான் உள்ளது.
எங்களின் எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு தென்கொரியா செயல்பட வேண்டும். எங்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதைத் தடுத்தால்தான், அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது பற்றி யோசிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியை காண வந்த வடகொரிய உயர் அதிகாரிகள், இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்குவது பற்றி தென்கொரிய அரசுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பேச்சு நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.