பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசின் தனியார் மய திட்டங்க ளுக்கு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் 47வது ஆண்டு தொடக்க விழா கூட்டம் கராச்சியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், கட்சியின் வருங்கால தலைவராக கருதப்படும் பிலாவல் புட்டோ (25) பேசியதாவது:
“நட்டத்தில் இயங்கி வரும் அரசின் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ், இரும்பு ஆலை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தனிப்பட்ட லாபம் கருதியே இப்பணி நடைபெறுகிறது. 100 சதவீத தனியார் மயத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இது தனியார் மயம் அல்ல. இது சொந்த லாபத்துக்கான நடவடிக்கை” என்றார் பிலாவல்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இக் கட்சியை தொடங்கிய ஜுல்பிகர் அலி புட்டோ, அவருக்குப் பின் கட்சித் தலைவரான பெனாசிர் புட்டோ ஆகியோருக்குள்ள மக்கள் செல்வாக்கு பிலாவல் புட்டோவுக்கு இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் 2018ல் நடைபெறும் நாடாளு
மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதன் மூலம் இந்த விமர்சனங் களை பொய்யாக்குவேன் என்று பிலாவல் கூறி வருகிறார்.