அண்டார்க்டிக் கடலில் உறைபனியில் சிக்கிய இரு கப்பல்களும் மீண்டு, பனிப்பகுதியில் இருந்து விலகி, இயல்பான கடல்பகுதிக்குள் சென்றன.
ரஷிய ஆராய்ச்சிக் கப்பலான எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பல் 74 பயணிகளுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அண்டார்டிக் கடலுக்குள் சென்றபோது, உறைபனியில் சிக்கியது. மிகத் தடிமனான பனிக்கட்டிகளால் சூழப்பட்ட அக்கப்பலால் நகர முடியவில்லை.
அக்கப்பலை மீட்கச் சென்ற சீனத்தின் ‘ஸ்னோ டிராகன்’ கப்பலும் உறைபனிக்குள் சிக்கியது. இதையடுத்து ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த மற்றொரு மீட்புக் கப்பல், மீட்புப் பணியில் ஈடுபடாமல், பாதுகாப்பான கடல்பகுதிக்கு திரும்ப அழைக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்காவின் உதவியை ரஷியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோரின. அமெரிக்க கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான பனி உடைப்புக் கப்பல் அங்கு விரைந்தது. அதற்குள்ளாக, உறைபனியில் சிக்கிக் கொண்டிருந்த இரு கப்பல்களும் தாங்களாகவே உறைபனியில் இருந்து விடுவித்துக் கொண்டன. இதைத்தொடர்ந்து, அமெரிக்க பனி உடைப்புக் கப்பல் மீட்புப்பணிக்குச் செல்லாமல், தன் வழக்கமான பணிக்குத் திரும்பியது.
ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு பிரிவு துணை அட்மிரல் பால் எப்.ஜுகுந்த் கூறுகையில், “எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பலும் ஸ்னோ டிராகன் கப்பலும் உறைபனியில் இருந்து விடுவித்துக் கொண்டன” என்றார்.
உறைபனியில் சிறிது வெடிப்பு ஏற்பட்டது. அதனைப் பயன்படுத்தி இரு கப்பல்களும் மெதுவாக நகர்ந்து, வழி ஏற்படுத்திக் கொண்டன. எம்.வி.ஷோகல்ஸ்கி கப்பல் தற்போது நியூஸிலாந்துக்கு அருகில் சென்று கொண் டிருக்கிறது. சீனாவின் ‘ஸ்னோ டிராகன்’ கப்பலும் தடிமனான பனி உள்ள பகுதியில் இருந்து, மென்மையான பனி உள்ள பகுதிக்கு நகர்ந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.