ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட வேண்டும். வெள்ளை மாளிகை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு, தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளின் படியே செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
குடியரசு கட்சியின் தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப் பேசும்போது, "நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க மக்கள் வரலாற்றின் மாற்றத்துக்காக வாக்களித்தார்கள். மேலும் அரசின் தீவிர நடவடிக்கைகளுக்காகவும் வாக்களித்தார்கள். அமெரிக்க மக்கள் எனக்கு தெளிவான வழிமுறையை கூறியுள்ளார்கள். அது என்னவென்றால் 'நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது' என்பதுதான்.
அமெரிக்காவிடமிருந்து விலகிச் சென்ற வேலை வாய்ப்புகள் மீண்டும் திரும்ப வந்துள்ளன.
நமது தேசத்தின் பெருமை நமது ஆன்மாவை கிளறியுள்ளது, புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது" என்றார்.
மேலும், மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் உருவாகப்படவுள்ள எல்லைச் சுவர் பற்றி கூறும்போது, "ஆம் நாம் தென்பகுதியில் உருவாக்கப் போகும் எல்லைச் சுவரால் பல உயிர்களும், வேலை வாய்ப்புகளும் பாதுகாக்கப்படும்.
ஆனால் எங்களது உறுதியான நடடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் உதவ மறுக்கின்றன. நான் உங்களிடம் (அமெரிக்க மக்கள்) நேர்மையாக உள்ளேன். நான் நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர் இது மோசமானது. குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவே நான் நீதிபதிகளை விமர்சிக்கிறேன்" என்று கூறினார்.