இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானியர் மலாலா ஆகியோர் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் ஆதரவாக இருக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவில் உன்னதமான சேவைகளைப் புரிந்து வரும் முன்னோடிகளுக்கு `ஆசிய சொஸைட்டி கேம் சேஞ்சர்' எனும் விருதை இந்த ஆண்டு முதல் `ஆசியா சொஸைட்டி' அமைப்பு வழங்குகிறது.
இந்த முதலாம் ஆண்டு விருது இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானியர் மலாலா யூசஃப் சாய் உட்பட 11 ஆசியர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை வழங்கிப் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், "சுரண்டல், பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலக மக்களுக்கெல்லாம் சத்யார்த்தியும், மலாலாவும் நம்பிக்கை தருபவர்களாக உயர்ந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து ஐ.நா.மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் சேவைக்குத் தொடர்ந்து ஐ.நா. ஆதரவு தரும்" என்றார்.