உலகம்

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் ஜோங் உன்: வட கொரிய குழப்பத்துக்கு முடிவு

ஐஏஎன்எஸ்

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் காணாமல் போனதாக குழப்பம் ஏற்பட்ட நிலையில், 40 நாட்களுக்கு பின்னர் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதால் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், கடைசியாக செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி, இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து 40 நாட்களாக அதிபர் குறித்த எந்த விவரமும் ஊடகம் வழியாக வெளியாகவில்லை. இ

தனால் அதிபர் கிம் காணாமல் போனதாக தகவல் வெளியானதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அந்தக் குழப்பத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அரசின் முக்கிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் அதிபர் கிம் ஜோங் பங்கேற்க தவறியதால் வட கொரிய அதிபரின் உண்மை நிலை என்ன என்பது குறித்த சர்ச்சை இருந்து வந்தது.

இதனை அடுத்து, அரசு தரப்பில் அதிபர் கிம் ஜோங், ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டதாகவும், அதிபரின் பணிகளை அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் கவனிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த நாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு மாவட்டத்தை பார்வையிட்ட கிம் ஜோங், தனது பாரட்டுக்களை தெரிவித்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

"கட்டுமானம் முடிந்த பகுதிகள் அதிபர் வருகைக்காக பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதனைக் கண்ட அதிபர் கிம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்" என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிபர் கிம் ஜோங், புதிதாக கட்டப்பட்டு வரும் இயற்கை அறிவியல் மற்றும் ஆற்றல் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். அதிபரின் இந்த வருகை அரசு செய்தி குறிப்பில் இல்லாதது என்றும் திடீரென மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜோம் 40 நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பான செய்தி அந்நாட்டு மக்களின் குழப்பத்துக்கு முடிவை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT