ஹாங்காங்கில் ஜனநாயக முறையிலான தேர்தல் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் சுதந்திரம் கோருவதற்கான முயற்சி என சீன கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
ஹாங்காங்கில் மாணவர் அமைப்பினர் கடந்த மூன்று வாரங் களுக்கு மேல் சில பகுதிகளைக் கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் ஹாங்காங்குக்கு தனி சுதந்திர நாடாக்கும் முயற்சி என சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ கருத்து தெரிவித்துள்ளது. ‘பீப்பிள்ஸ் டெய்லி’ நாளிதழ் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ குரலாகவே கருதப்படுகிறது. ஹாங்காங் போராட்டம் குறித்து முதன் முதலாக அப்பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
“ஹாங்காங் மாணவர் இயக்கத்தினர், ஹாங்காங்குக்கு சுய நிர்ணய உரிமையை எதிர்பார்க்கின்றனர். அது, சுதந்திரமாகக்கூட இருக் கலாம்” என தெரிவித்துள்ளது. ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ், “அந்நிய சக்திகளுடன் இணைந்து போராட்டக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். அரசி யல் சுதந்திரம் கோரி அவர்கள் போராடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது. ஹாங்காங் தலைமை நிர்வாகி லியுங் சுன் யிங் உட்பட பல்வேறு அதிகாரிகள், ‘போராட்ட இயக்கம் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.
லியுங் சுன் யிங் கூறும்போது, “அந்நிய சக்திகளுக்கு இதில் தொடர்பிருக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டுப் போராட்டம் அல்ல. இது கையை மீறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். ஹாங்காங் மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த அலெக்ஸ் சோ யாங்-காங் கூறும்போது, “இக்குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க புனையப்பட்டவை. அரசு இயன்ற வரையில் மறு சீரமைப்பு செய்யும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மக்கள் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “நிலைமை கட்டுமீறிப் போய் விட்டது எனக் கூறுவது பாரபட்சமானது. பெரும்பான்மை போராட்டக்காரர்கள் அமைதியான வழியில்தான் போராடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.