உலகம்

364 புத்தகங்களை 7 மாதத்தில் படித்து பிரிட்டன் சிறுமி சாதனை

செய்திப்பிரிவு

பிரிட்டனைச் சேர்ந்த 9 வயது சிறுமி 364 புத்தகங்களை வெறும் 7 மாதங்களில் படித்து சாதனை படைத்துள்ளார்.

செஷைர் பகுதியில் உள்ள ஆஷ்லே கிராமத்தைச் சேர்ந்த பெயித் (9) என்ற சிறுமி, இன்றைய சிறுவர்களைப் போல தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனல் களை பார்ப்பதையும் கம்ப்யூட்டரில் விளையாடுவதையும் விரும்புவதில்லை. மாறாக, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர், ரோல்டு தலின் நாவல்களை விரும்பிப் படிக்கிறார்.

பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது முதலே புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் பெயித். தனது ஆசிரியர்கள் அதிக புத்தகங்களைப் படிப்பதை அறிந்த அவருக்கு அதுவே உந்துதலாக அமைந்தது.

"தொலைக்காட்சி சேனல்களைப் பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டரில் விளை யாடுவதால் கற்பனைத்திறன் எந்த அளவுக்கு ஊக்குவிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு புத்தகம் படிப்பதாலும் சுயமாக சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் என பெயித் கூறுகிறார்" என பெயித்தின் தாய் லாரன் கூறியுள்ளார்.

"விலங்குகள் அல்லது மேஜிக் அல்லது வீரச்செயல்களைக் கொண்ட கதாபாத்திரங்களுடன் கூடிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேநேரம் புத்தகம் படிப்பது மட்டுமே எனது வாழ்க்கை அல்ல.

வாரத்துக்கு 4 மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபடுகிறேன். தவிர, கராத்தே பயிற்சி பெறுகிறேன். வலை பந்து மற்றும் டிரம் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபடுகிறேன்" என பெயித் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT