நேபாளத்தில் இமயமலை பகுதியில் வீசிய கடும் பனிப் புயலில் சிக்கி 3 இந்திய மலையேற்ற வீரர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
வடக்கு நேபாளத்தில் இமயமலை பகுதியில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக அங்கு லேசாக பனிப் புயல் வீசி வந்தது. இது திடீரென தீவிரமடைந்தது. இதனால் கடுமையான பனிப் புயலும், சில இடங்களில் பனிப்பாறைகளும் சரிந்து விழுந்தன.
மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மலையேற்ற வீரர்கள் இதில் சிக்கினர். இதுவரை 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், 3 பேர் இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள். 11 பேர் நேபாளத்தைச் சேர்ந் தவர்கள்.
பனிப்புயல் வீசிய பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இதில் 70 பேரது நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. மீட்பு பணிகளில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேபாள ராணுவமும், போலீ ஸார் மற்றும் மீட்புக் குழுவினரும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனிக்கு கீழ் சில அடி ஆழத்தில் உடல்கள் புதைந்துவிட்டதால், அவற்றை தோண்டி எடுக்கும் பணி கடினமாக உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பனிப் புயல் வீசும் அபாயம் இருப்பதால் மலைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.