உலகம்

கஞ்சா பயிரிடலாம், விற்கலாம், புகைக்கலாம்

செய்திப்பிரிவு

கஞ்சாவை பயிரிடவும் விற்கவும் புகைக்கவும் அனுமதி அளித்து உருகுவே அரசு சட்டம் இயற்றியுள்ளது. சில நாடுகளில் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகில் முதல்முறையாக கஞ்சா செடியை வளர்க்கவும் விற்கவும் உருகுவே அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அரசு மருந்தகங்களில் மாதத்துக்கு 40 கிராம் கஞ்சாவை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் 6 கஞ்சா செடிகளை வளர்க்கலாம். 15 முதல் 45 பேர் இணைந்து தனிச் சங்கம் தொடங்கி ஆண்டுக்கு 99 கஞ்சா செடிகள்வரை வளர்க்கலாம் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்சைக்குரிய இந்தச் சட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், கஞ்சா பயன்பாட்டால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளன. மறுபுறம், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் மாண்டிவிடியோவில் பெருந்திரளான மக்கள் நாடாளுமன்றம் முன்பு குவிந்து கொண்டாட்டங்களில் ஈடு பட்டனர்.

தென் அமெரிக்காவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான உருகுவேயில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த நாட்டின் சிறைக் கைதிகளில் மூன்றில் ஒருவர் கஞ்சா கடத்தல் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவராக உள்ளார்.

எனவே, சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயிரிட, விற்க, புகைக்க சட்டபூர்வ அனுமதி அளித்து அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அதிபர் ஜோஸ் முஜிகா செய்தியாளர்களிடம் கூறியது:

கஞ்சாவைவிட கஞ்சா கடத்த லால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக உள்ளன. எனவே இந்தச் சட்டத்தை சமூக- பொருளாதார சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கஞ்சா கடத்தல் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறக்கிறது.

இதை தடுக்க ஐ.நா. மேற்பார்வையில் அமெரிக்க ஆயுத, நிதி உதவியுடன் கஞ்சா கடத்தல்களை தடுக்கும் போர் 1971 முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைக்காக இதுவரை ஒரு லட்சம் கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது. 4.5 கோடிக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “மாத்தி யோசி” பாணியில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்து உருகுவே மேற்கொண்டுள்ள புதிய முயற்சியை தென்அமெரிக்க நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

SCROLL FOR NEXT