உலகம்

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: பருவநிலை மாறுபாடு, சர்வதேச தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தம், சர்வதேச தீவிரவாதம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யாவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அந்த நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்துப் பேசினார்.

பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அதிபர் மக்ரோனும் ஆலோசனை நடத்தினர். மேலும் சர்வதேச தீவிரவாதம் குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதன்பின் இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி யளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் விளங்குகிறது. அதனை வேரறுக்க சர்வதேச நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தை நிறை வேற்ற பிரான்ஸுடன் இந்தியா தோளோடு தோள் நின்று பணியாற்றும். நமது எதிர்கால தலைமுறையினரின் நன்மைக்காக பாரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். தாய் பூமியை காப்பது நமது கடமை.

இந்தியர்களை பொறுத்தவரை இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம். பாரீஸில் சர்வதேச சூரியசக்தி கூட்டணி உருவாக் கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பிரான்ஸ் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியதாவது:

தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் போரிட்டு வருகிறது. அதற்கு இந்தியா ஆதரவு அளிப் பதை வரவேற்கிறேன். இதேபோல தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா நடத்தி வரும் போருக்கு பிரான்ஸ் அதரவு அளிக்கும். கலாச்சாரம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT