ஐ.நா. அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடேவின் பதவியை அங்கீகரிகக்க் கோரி, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே மீது விசா மோசடி வழக்கை பதிவு செய்த போலீஸார், அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். அவரின் ஆடையை களைந்து சோதனையிட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அதற்கு அமெரிக்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, தேவயானி கோப்ரகடேவுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதிகள் குழு அலுவலகத்துக்கு இந்திய அரசு பணியிட மாற்றம் செய்தது. இதற்கான அறிவிக்கையை ஐ.நா.வுக்கு இந்திய அரசு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி அளித்த பேட்டியில், "ஐ.நா.வுக்கான இந்திய தூதரகக் குழுவில் தேவயானி கோப்ரகடே, கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐ.நா. சபை தூதரகப் பணிக்கான சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கக் கோரி டிசம்பர் 18-ம் தேதி பொதுச் செயலர் பான் கி-மூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.
இந்தியா அளித்துள்ள ஆவணங்களை ஐ.நா. சபை சரிபார்த்த பின்னர், அங்கிருந்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்படும். இந்தியத் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன. இனிமேல் ஐ.நா. சபைக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்க வெளியுறவுத் துறையைச் சார்ந்தது" என்றார்.
இதனிடையே, இந்தியாவின் கோரிக்கை ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானியை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகப் பணிக்கு மாற்றியிருக்கும் நடவடிக்கை அவருக்கு சட்டப் பாதுகாப்பை அளிக்காது. அவர் மீதான புகார் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை வாபஸ் பெறப் போவதில்லை. விசாரணை தொடரும் என்று அமெரிக்க அரசு மீண்டும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.