இரு நாடுகளுக்கு இடையே நிலைமை சுமுகமாக இருந்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று வடகொரியா கூறியுள்ளது.
இதுகுறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "இரு நாடுகளுக்கிடையே நிலைமை சுமுகமாக இருந்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது. மேலும் கொரிய தீபகற்பப் பகுதியில் நிலவும் பதற்ற நிலையைத் தணிப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்துடன் சரியான தருணத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
முன்னதாக ஐநா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா அரசு ஏவுகணை சோதனை, அணுகுண்டு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளையும் வடகொரியா மிரட்டி வருகிறது. அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பகிரங்கமாகவே கூறியது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.