அரசு அலுவல்கள் முதல் செல்ஃபீக்களை பகிர்வது வரை உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். பல தலைவர்களுக்கு இது சாதகமான கவன ஈர்ப்பை பெற்று தந்துள்ளது.
பொதுமக்களுடன், நேரடியான உறவுக்கு நிகரான அனுபவத்தை சமூக வலைதளங்கள் ஏற்படுத்துவதனாலும் அவ்வப்போது நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பெரிதும் உதவுகிறது.
அந்த வகையில் தனது செயல்பாடுகளை சமூக வலைதளங்கள் வழியாக கொண்டு சென்றதில் தனி இடம் பிடித்தவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. இவரது பக்கத்துக்கு சுமார் 4 கோடியே 60 லட்சம் லைக்குகள் உள்ளன.
ஒபாமாவை விட ஃபேஸ்புக்கில் மிகவும் தீவிரமாக இயங்க தொடங்கியவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. 2015-ல் மட்டும் அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு இணையவாசிகளால் 20 கோடிக்கும் மேலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அவரது பகிர்வுகளுக்கு கிடைத்துள்ள லைக்ஸ், கமென்ட்ஸ் மற்றும் ஷேர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கிடைத்ததை விட 5 மடங்கு அதிகமாக உள்ளதாக பெர்ஸன் மார்ஸ்டெல்லர் என்ற தகவல் தொடர்பு சார்ந்த நிறுவனம் 'ஃபேஸ்புக்கில் உலக தலைவர்கள்' என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
அந்த வரிசையில் துருக்கி அதிபர் ரிகாப் தாயிப், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோவோ மற்றும் எகிப்து அதிபர் அப்தல் ஃபத்தா சிசி ஆகியோர் பட்டியலின் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தின் முதல் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 193 நாடுகளின் ஐநா பிரதிநிதிகளில் 169 பேர் தங்களுக்கான அதிகாரபூர்வ அலுவல் முறையிலான ஃபேஸ்புக் பக்கத்தை வைத்துள்ளனர்.
அதேப் போல, 24 நாடுகளின் அரசுகள் ஃபேஸ்புக்கில் இன்னும் கால் பதிக்கவே இல்லை. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நாடு சீனா. அங்கு சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலக தலைவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 302,456 பதிவுகளை இட்டு 230 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.