வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நம் கொலை விவகாரத்தில் வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. வடகொரியாவுக்கான மலேசிய தூதர் நேற்று வாபஸ் பெறப்பட்டார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம். அவர் கடந்த 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலை யத்தில் நின்றிருந்தபோது 2 பெண்கள் அவர் மீது விஷ திரவத்தைத் தெளித்தனர். இதில் அவர் உயிரிழந்தார்.
குடும்ப சண்டை காரணமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவின்பேரில் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில், கிம் ஜாங் நம்மின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்குமாறு வடகொரியா கோரியது. அதை மலேசியா ஏற்க மறுத்துவிட்டது.
மேலும் விசாரணையில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வடகொரியா விடுத்த கோரிக்கையையும் மலேசியா நிராகரித்துவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியபோது, மலேசியா எதையோ மறைக்கிறது, வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக சதி செய்கிறது என்று குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கான மலேசிய தூதர் நேற்று திரும்ப அழைக்கப்பட்டார்.
இதனிடையே கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல்கட்ட விசா ரணையில் வடகொரியாவைச் சேர்ந்த ஒரு கும்பல் கிம் ஜாங் நம்மின் கொலையை திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.