தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றில் படகு மூழ்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேரை காணவில்லை.
பழமையான ஆயூத்தயா நகரில் உள்ள மசூதி ஒன்றின் வருடாந்திர விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முஸ்லிம் யாத்ரீகர்கள் 100-க்கும் மேற்பட்டோர், 2 அடுக்கு சுற்றுலா படகில் நான்தபுரி என்ற இடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அயூத்தயா நகருக்கு அருகில் ஆற்றின் கரையோர கான்கிரீட் சுவர் மீது படகு மோதியது. இதில் படகு சேதம் அடைந்து அடுத்த 2 நிமிடங்களில் நீரில் மூழ்கியது.
இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்றுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 12 பேரை காணவில்லை.
படகு மூழ்கிய விபத்தில் 44 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காணாமல்போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.