உலகம்

பாகிஸ்தான் தாலிபான் தலைவருக்கு இந்தியாவின் ‘ரா’ புகலிடம்: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பரபரப்புக் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுவான ஜமாத்துல் அஹ்ராரின் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான், பாகிஸ்தான் தாலிபான் தலைவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான ‘ரா’ மற்றும் ஆப்கன் புலனாய்வு அமைப்புகள் புகலிடம் அளித்து காத்து வருகின்றன என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் அஹ்ரார் இயக்கத்தின் இசானுல்லா இசான் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் பிடித்துக் கைது செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அவரது வீடியோ வாக்குமூலத்தில் அவர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.

அதாவது இந்தியாவின் ரா மற்றும் ஆப்கானின் என்டிஎஸ் ஆகியவை ஆப்கானில் பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு இவர்களை இந்த உளவு அமைப்புகள் தூண்டுகின்றன என்று மற்றுமொரு குற்றச்சாட்டையும் இசான் வைத்தார்.

பாகிஸ்தானில் கடந்த 2 ஆண்டுகள் பயங்கரவாதத்தாக்குதல்களை நடத்திய ஜமாத்துல்லா அஹ்ரார் அமைப்பு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

வீடியோவில் சல்வார் கமீஸ் உடையில் தோன்றிய இசான், தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் தலைவர் முல்லா ஃபாஸ்லுல்லாவுக்கு இந்தியாவின் ரா அமைப்பும் ஆப்கானின் என்டிஎஸ் உளவு அமைப்பும் பாதுகாப்பு புகலிடம் அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். முல்லா ஃபாஸ்லுல்லா பாகிஸ்தானில் தேடப்படும் தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT