உலகம்

எதிர்ப்புகளை மீறியும் சீனாவில் நடந்தது நாய்க்கறி திருவிழா

ஏபி

கடும் எதிர்ப்புகளை மீறியும் சீனாவின் யூலின் நகரில் இந்த ஆண்டும் நாய்க்கறி திருவிழா நடத்தப்பட்டது.

தெற்கு சீனாவின் யூலின் நகரில் பல ஆண்டுகளாக நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இத்திருவிழாவின்போது 10 முதல் 20 மில்லியன் நாய்கள் கொல்லப்படுகின்றன.

அண்மைக்காலமாக இந்த திருவிழாவுக்கு பிராணிகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை ஒன்றின் சார்பில் பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், கருத்து கேட்கப்பட்ட, 16 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களில், 64 சதவீதம் பேர் நாய்க்கறி திருவிழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க ஆதரவு தெரிவித்தனர்.

யூலின் நகர மக்களே இத்திருவிழாவை ரசிக்கவில்லை என்பது இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, 69 சதவீதம் பேர், இதுவரை தாங்கள் நாய்க் கறி சாப்பிட்டதில்லை எனக் கூறினர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி இன்று (செவ்வாய்க்கிழமை) யூலின் நகரில் நாய்க்கறித் திருவிழா திட்டமிட்டபடி நடைபெற்றது.

இந்நிலையில், நாய்களை காப்பாற்றும் வகையில் அவை விற்கப்படும் அங்காடிகளில் இருந்து அவற்றை பெருமளவில் வாங்கிச் சென்ற பிராணிகள் ஆர்வலர்கள் அவற்றை வேறு இடத்தில் விடுவித்தனர். ஆனால், சீன பாரம்பரியத்தின் ஒரு பகுதியை சிதைக்க பிராணிகள் ஆர்வலர்கள் முற்படுவதாக உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டினர்.

SCROLL FOR NEXT