உலகம்

உலக மசாலா: வாழ்தல் இனிது!

செய்திப்பிரிவு

அரிசோனாவைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரையன் கோல்ஃபேஜ், 2004-ம் ஆண்டு இராக்குடன் நடைபெற்ற போரின்போது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தார். அருகில் இருந்த வீரர் ஒருவர் பெருகிய ரத்தத்தைத் துண்டால் கட்டுப்படுத்தி, ராணுவ முகாமுக்குத் தூக்கிச் சென்றார். மிக மோசமான பாதிப்பு. 8 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அடுத்த ஓராண்டில் 16 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உடலில் வைத்த உலோகத்துண்டுகள் நீக்கப்பட்டன. செயற்கைக் கால்களும் கைகளும் பொருத்தப்பட்டன. உடலைச் சமன் செய்து எப்படி நடக்க வேண்டும் என்றும் செயற்கைக் கையால் எப்படி எழுத வேண்டும் என்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நாடு திரும்பிய பிறகு தனக்கேற்ற வேலையைத் தேடிக்கொள்வதற்காகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கட்டிடவியல் படிப்பை முடித்தார். கட்டிடங்களுக்கு வரைபடம் செய்து கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டெக்சாஸ் நகரில் இருந்தபோது உணவகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் நினைவு இவருக்கு வந்துகொண்டே இருந்தது. ஃபேஸ்புக் மூலம் அவரைத் தொடர்புகொண்டார். ஆனால் அவர் தனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும் நேரில் சந்திப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். இருவரும் சந்தித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண், தனக்குக் காதலர் யாரும் இல்லை என்றும் பிரையனைத் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவிட்டார். 2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார்கள்.

வாழ்தல் இனிது!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசித்து வருகிறார் ஜாவோ. இவரது வீட்டு மாடியில் குடியிருப்பவர்களால் எப்பொழுதும் அளவுக்கு அதிகமான சத்தம் வந்து காதைக் கிழித்துக்கொண்டேயிருந்தது. களைப்புடன் வீடு திரும்பும் ஜாவோவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பலமுறை சத்தத்தைக் குறைக்கும்படிச் சொல்லிப் பார்த்தார். ஆனால் அந்த வீட்டிலுள்ளவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பொறுமை இழந்தவர், பில்டிங் ஷேக்கரை விலை கொடுத்து வாங்கினார். வெள்ளிக்கிழமை மாலை அதை இயக்கி, வீட்டைப் பூட்டிச் சென்றுவிட்டார். டிரிலிங் இயந்திரம் போல சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மாடி வீட்டுக்காரர்கள் கீழே வந்து பார்த்தபோது, வீட்டில் ஆள் இல்லை. சத்தம் பொறுக்க முடியாமல் காவல்துறையில் புகார் கொடுத்தனர். ஆள் வரும்வரை வீட்டைத் திறக்க முடியாது என்றார்கள் காவலர்கள். இரண்டு நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை வீடு வந்து சேர்ந்தார் ஜாவோ. இயந்திரத்தை நிறுத்திவிட்டு, காரணத்தைக் கூறினார். மாடி வீட்டுக்காரர்கள் மன்னிப்புக் கேட்டனர். ஜாவோவுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார்கள் காவலர்கள்.

சத்தத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா!

SCROLL FOR NEXT