காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி சூழல் ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் கூறினார். பாகிஸ்தானில் உள்ள காகுலில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: “ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தீர்வு காண்பதற்கு அனுமதிக்க வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையும், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை சார்ந்த உறவும் நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம்.
இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்றால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ளது. பாகிஸ்தானை ஆக்கிர மிக்க நினைத்தால், தகுந்த பதிலடியை தருவோம்.
வஜிரிஸ்தானில் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தீவிரவாதத்தை முற்றிலும் அகற்றும் வரை ஓயமாட்டோம். நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ராணுவத்தின் குறிக்கோள். வஜிரிஸ் தானை மையப்படுத்தி தீவிரவாதிகள் ஏற்படுத்தியிருந்த கட்டமைப்பை அழித்துவிட்டோம். இவ்வாறு ரஹீல் ஷெரீப் கூறினார்.