1791 டிசம்பர் 4
தி அப்சர்வர் உலகின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள் இங்கிலாந்தில் இருந்து இதே தேதியில் தான் வெளியானது. W.S.போர்ன் என்பவர் இதனை வெளியிட்டார். ஆரம்பத்தில் அரசின் மானியம் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது.
அதன் பிறகு எட்டு பேரிடம் கைமாறி உள்ளது. 16 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். மாறிய சூழல்களுக்கு ஏற்ப பத்திரிகையின் வளர்ச்சியும் ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது.
பர்சாத் பசோப்ட் எனும் அப்சர்வரின் செய்தியாளர் 1990ல் ஈராக்கில் தூக்கில் போடப்பட்டார். அவர் உளவாளி என்ற குற்றச்சாட்டு, பிறகு உண்மையல்ல என ஒப்புக்கொள்ளப்பட்டது.
2008ல் முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டதால் எகிப்தில் அப்சர்வர் தடைசெய்யப்பட்டது.
2005ல் அப்சர்வர் இணையத்துக்குள் நுழைந்தது. பத்திரிகையின் உள்நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்துகிற பழக்கத்தை அப்சர்வர் தொடங்கி வைத்தது.
அதன் சகோதர பத்திரிகையாக தி கார்டியன் எனும் புகழ்பெற்ற நாளிதழ் வெளியாகிறது.
தங்களின் அனைத்து ஆவணங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் லண்டன் நகரில் நியூஸ் ரூம் என்ற மையத்தை அப்சர்வரும் கார்டியனும் இணைந்து நடத்துகின்றன.
1791 முதல் 2003 வரை அப்சர்வரின் பழைய பத்திரிகைகள் இணைய தளத்திலும் கிடைக்கும். அந்த வசதி 2007 முதல் செய்யப்பட்டுள்ளது.
222 வருடங்களாக வெளியாகும் அப்சர்வர் தற்போது 2லட்சத்து 16 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது.