ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைத் தளத்தில் பணியாற்றி வந்த உள்ளூர் பாதுகாவலர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலை வில் பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத் தளம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவுப் பணி முடித்த உள்ளூர் பாதுகாவலர்கள் வாகனங்களில் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டனர். இந்நிலையில் படைத் தளத்துக்கு அருகில் இவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர். இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை.
ஆப்கனில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் போராடி வரும் நிலையில், அதற்கு உதவிடும் வகையில் அமெரிக்கா விரைவில் தனது படை பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆப்கனில் 6 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 8,400 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களைத் தவிர நேட்டோ நாடுகள் சார்பில் 5,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான நேரடி சண்டையில் ஈடுபடுவதில்லை. ஆப்கன் படைகளுக்கு ஆலோசனை மட்டுமே கூறி வருகின்றனர்.
ஆப்கனில் கடந்த 2001-ல் தலி பான்கள் ஆட்சியிலிருந்து அகற் றப்பட்டது முதல் அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் போரிட்டு வருகின்றன.