உலகம்

13 ஆயிரம் பேரை காணவில்லை: கிளிநொச்சி விசாரணையில் புகார்

செய்திப்பிரிவு

போரின்போது 13 ஆயிரம் பேர் காணாமல் போனதாக கிளி நொச்சியில் நடந்த விசாரணையில் புகார்கள் பெறப்பட்டன.

காணாமல் போனவர்கள் பற்றி எச்.டபிள்யூ, குணதாசா உள்ளிட்ட 3 உறுப்பினர் குழு விசாரித்து வருகிறது. இலங்கையில் 30 ஆண்டு காலம் நடந்த போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது முன்னாள் விடுதலைப்புலிகளின் ராணுவத் தலைமையகம் அமைந்திருந்த முல்லைத் தீவு சென்று விசாரிக்க உள்ளது.

இது பற்றி குணதாசா கூறியதாவது: கிளி நொச்சி மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமையுடன் முடிந்த 4 நாள் விசாரணையின்போது இந்த குழு முன் 440 பேர் ஆஜரானார்கள். எங்களிடம் வந்த புகார்களை விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்து 162 வழக்குகளை அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளோம்.

புகார் தெரிவிக்க கெடு தேதி டிசம்பர் 31 ஆகும். ஆனால் காணாமல் போனவர்கள் பற்றி கெடு தேதிக்கு அப்பாலும் புகார் கொடுக்கலாம். போர் நடந்த வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து காணாமல்போனவர்கள் பற்றி சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரோ அல்லது உறவினர்களோ புகார் கொடுக்கலாம். இலங்கை பாதுகாப்புப்படையினர் தரப்பில் காணாமல் போனவர்கள் பற்றி அவர்களின் குடும்பத்தார் புகார் தெரிவிக்கலாம் .

1990ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை நடந்த போரின்போது காணாமல் போனவர் குறித்து விவரம் சேகரிக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த குழு அமைக்கப்பட்டது.

போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க குழுவின் முக்கிய .பரிந்துரைகளில் ஒன்று காணாமல் போனவர்கள் பற்றி விசாரணைக் குழு அமைப்பதாகும். வடக்கில் :சண்டை நடந்த பகுதிகளில் அரசு தரப்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 8000 பேர் கொல்லப்பட்டதாகவும், போரின்போது 6350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT