பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதற்கு முன் 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ராணுவப் புரட்சியில் ஈடுபட்டு அவரது ஆட்சியைக் கவிழ்த்ததில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜெனரல் முகமது அஜிஸ் கானை திங்கள்கிழமை சந்தித்து கைகுலுக்கினார்.
பகவால்பூர் மாவட்டத்தில் உள்ள கைர்பூர் தமேவாலி என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஜெனரல்கள் முகமது அஜிஸ் கான், அப்துல் வாஹீத் காகர் ஆகியோரை இப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பக் பர்வேஸ் கயானி அழைத்திருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அருகே அந்த இரு முன்னாள் ஜெனரல்களும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்த இரு ஜெனரல்களும் பதவியில் இருந்தபோது, ராணுவப் புரட்சி மூலம் நவாஸ் ஷெரீபை ஆட்சியிலிருந்து அகற்றி, அவர் கைதாக காரணமாக இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் இருவரையும் நவாஸ் ஷெரீப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி கயானி, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பற்றி ஷெரீப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து, வேறுவழியின்றி, அவர்களை நோக்கிச் சென்ற ஷெரீப், காகரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
ஆனால், அஜிஸ் கானிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவரிடம் ஷெரீப் கைகுலுக்கினார்.
பின்னர் நடைபெற்ற விருந்தின்போதும் ஷெரீப், கயானி அமர்ந்த அதே மேஜையில் அஜிஸ் கானுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
1999-ம் ஆண்டு முகமது அஜிஸ் கான் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் புரட்சி செய்து நவாஸ் ஷெரீபை ஆட்சியிலிருந்து அகற்றினர். அதைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் ஆட்சியை கைப்பற்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.