உலகம்

தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்க வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஏபி

தென் கொரியாவின் புதிய அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

ஐ.நா., மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா அரசு ஏவுகணை சோதனை, அணுகுண்டு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளையும் வடகொரியா மிரட்டி வருகிறது. அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பகிரங்கமாகவே கூறியது.

இந்நிலையில் தென் கொரியாவின் புதிய அதிபராக கடந்த வாரம் மூன் ஜே இன் (64) பதவியேற்றார். அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. அந்த ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. இத்தகவலை தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ராணுவத்தினர் உறுதிப்படுத்தினர். மேலும், வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யோஷிஹைட் சுகா கூறும்போது, ‘‘வடகொரியாவின் ஏவுதளத்தில் இருந்து 800 கி.மீ.தூரம் ஏவுகணை பாய்ந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது’’ என்றார். அதேசமயம் அந்த ஏவுகணை 2000 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லும் திறன்படைத்தது என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வடகொரியா தாக்குதல் நடத்தினால், அதை சமாளிக்க பசிபிப் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து பசிபிக் பிராந்திய அமெரிக்க கமாண்டர் நேற்று கூறும்போது, ‘‘வடகொரியா எந்த வகையான ஏவுகணையை சோதனை செய்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை ரகத்தை சேர்ந்தது இல்லை’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT