பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க வாழ் இந்தியர் ரஜத் குப்தாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பு சார்பில் கோரப் பட்டுள்ளது.
கோல்ட்மென் சேக்ஸ் நிறு வனத்தின் முன்னாள் இயக்கு நரான ரஜத் குப்தா, உட்தகவல் வணிகம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு நீதிமன்றத்தில் புகார் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஜத் குப்தா மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜாமீன் பெற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இதே குற்றத்துக்காக ரஜத் குப்தா மீது சிவில் வழக்கு ஒன்றும் தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், அவருக்கு 13.9 மில்லியன் டாலர் அபராதமும், பங்குச் சந்தையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணி யாற்றுவதற்கு வாழ்நாள் தடையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரஜத் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
ரஜத் குப்தாவின் மனுவை எதிர்த்து அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது: “ரஜத் குப்தாவுக்கு மாவட்ட நீதிமன்றம் விதித்த அபராதமும், நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையும் சரியான முடிவாகும்” என்றார்.
இது தொடர்பாக பதில் அளிக்க ரஜத் குப்தாவுக்கு ஏப்ரல் 7-ம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.