உலகம்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை: சிவசங்கர் மேனன் தகவல்

செய்திப்பிரிவு

சீனா, ஜப்பான் மற்றும் பக்கத்து நாடுகளுடன் இணைந்து ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார்.

ஜெர்மனியின் மூனிக் நகரில் நடைபெற்ற 50-வது மூனிக் பாதுகாப்பு கருத்தரங்கில், ‘ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா’ என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க சீனா, ஜப்பான் மற்றும் பக்கத்து நாடுகளுடன் இணைந்து இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. இதன் மூலம், இந்தியாவிலும் இந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளிலும் வளர்ச்சியும் செழிப் பும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்” என்றார்.

சிவசங்கர் மேனனின் கருத்தை சீன நாடாளுமன்ற வெளியுறவுத் துறை விவகாரக் குழுவின் தலைவர் ஃபு யிங் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறுகையில், “இரண்டாம் உலகப் போரின்போது சீனர் களுக்கு எதிராக ஜப்பான் ராணுவ வீரர்கள் இழைத்த கொடுமையை போர்க் குற்றம் என அந்நாடு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனு டன் இணைந்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார். கிழக்கு சீனக் கடல் பகுதியில் உள்ள தீவு, யாருக்கு சொந்தம் என்பதில் ஜப்பானுக்கும் சீனாவுக் கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலடியாக ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிதா கூறுகையில், “சில நாடுகள் (சீனா) மிக அதிக செலவில் ராணுவத்தை மேம்படுத்தி வருகின்றன. இது கவலையளிக்கும் விஷயமாகும். இந்த பிராந்தியத்தில் சமநிலையை பேணுவதற்காக அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஜப்பான் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றார்.

SCROLL FOR NEXT