ஆப்பிரிக்காவின் 50 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமல் ஷா, சுதிர் ருபரேலியா, நவுஷத் மிராலி ஆகிய மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர்.
போர்ப்ஸ் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள எழுச்சியும், புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளதும் ஆப்பிரிக்க கண்டத்தில் புதிய கோடீஸ்வரர்கள் பலரை உருவாக்கியுள்ளது என்றும் அப்பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த விமல் ஷா, இப்பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார். ஷா அவரது குடும்பத்தினருடன் இணைந்து 1985-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் சோப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 2002-ம் ஆண்டு அவரது நிறுவனம் யூனிலிவர் சமையல் எண்ணெய் நிறுவனத்தை வாங்கியது. அவரது சொத்து மதிப்பு சுமார் 10 ஆயிரத்து 100 கோடியாகும்.
மற்றொரு இந்திய வம்சாவளி யினரான சுதிர் ருபரேலியா 24-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய். ருபரேலியா குழுமம் ஆப்பிரிக்காவில் முக்கியமாக உகாண்டாவில் வங்கி, ஹோட்டல், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முன்னிலையில் உள்ளது.
சமீர் குழுமத்தின் தலைவர் நவுஷத் மிராலி 48-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்து 700 கோடியாகும். கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, வேளாண்மை உள்ளிட்ட தொழில்களில் அவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.