அமெரிக்காவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியாயினர். அந்த வீரரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
இதுகுறித்து விமான நிலைய வட்டாரத்தினர் கூறியதாவது:
புளோரிடா மாகாணத்தின் புரோவார்டு பகுதியில் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. மிகவும் பரபரப்பான இந்த விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் லக்கேஜ்களை பெற்றுக்கொள்ளும் பகுதியில் இருந்த ஒருவர் திடீரென தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கினார்.
இதையடுத்து அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து விமான சேவைகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அங்கிருந்த பாதுகாப்புத் துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஸ்டார் வார்ஸ் டீ-சர்ட் அணிந்திருந்த அந்த நபரின் பெயர் எஸ்டபன் சான்டியாகோ (26) என்பதும் அவர் மனநல பாதிப்பு பிரச்சினைக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்ததும் விசா ரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இராக் போரில் பங்கேற்ற சாண்டியாகோ, அலாஸ்கா ராணுவ தேசிய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது செயல்பாடு சரியில்லை எனக்கூறி கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் எப்பிஐ அலுவலகத்துக்கு சென்றிருந்த சாண்டியாகோ, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக போரிடுமாறு சில ஏஜென்ட்கள் தன்னை வற்புறுத்துவதாக புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த சம்பவத் தில் பலியானவர்களின் குடும்பத் தினருக்கு அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.