அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணியின்போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். அடுத்த மாதம் 5ம் தேதி பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதை பிஎன்பி கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா ரத்து செய்யக் கோரி வருகிறார். இடைக்கால அரசின் கண்காணிப்பில்தான் இந்த தேர்தல் நடத்தப்படவேண்டும் என பிரதமர் ஷேக் ஹசினாவை எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது.
தடையை மீறி ‘ஜனநாயகப் பேரணி’ நடத்த டாக்காவுக்கு வந்து பேரணியை வெற்றி பெறச்செய்யும்படி தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார் காலிதா.
அதன்படி, பிஎன்பி ஆதரவாளர்கள் தலைநகரில் உள்ள உச்ச நீதிமன்றம் வளாகம், தேசிய பிரஸ் கிளப் வழியாக பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் பிஎன்பி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.
குல்ஷான் பகுதியில் உள்ள பிஎன்பி தலைவர் காலிதா ஜியாவின் இல்லத்தையும், நயாபல்தானில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தையும் அதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸார் தடுத்த போதிலும் அதை மீறி பிஎன்பி ஆதரவாளர்கள் பலர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. நயாபல்தானில் ஊர்வலத்தில் இணையப்போவதாக திட்டமிட்டிருந்தார் பிஎன்பி தலைவர் காலிதா ஜியா. அவரது வீட்டைச்சுற்றி போலீஸார் நின்றதால் வெளியே வர முடியவில்லை.
பிஎன்பி கட்சியினரும் அதன் தோழமைக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமி கட்சியினரும் ஊர்வலமாக வந்தபோது போலீஸார் தாக்கவே அதில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இறந்தார். பிஎன்பி அலுவலகம் செல்வதற்காக ராமாபுரம் பகுதியில் குவிந்த கட்சி ஆதரவாளர்கள் மீது ரப்பர் தோட்டாவைக் கொண்டு சுட்டபோது வன்முறை ஏற்பட்டது.
ஆளும் கட்சியினரும் மோதல்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் திரண்டு பிஎன்பி கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.