குடிமகன் காணாமல்போனால் அதிபரிடம் முறையிடலாம்... அந்த அதிபரே காணாமல் போனால்? - இப்படித்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் நிலையை ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக போட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு மாத காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், அந்நாட்டில் மட்டுமின்றி, உலக அளவில் பெரும் பரபரப்பும், வதந்தி தகவல்களும் பரவி வருகிறது.
வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், கடைசியாக செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி, இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதுவே வட கொரிய அதிபர் மக்கள் முன்னும், ஊடகப் பார்வையிலும் பட்ட கடைசி நிகழ்வாகும். அதன் பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காமல் உள்ளார். அவரது புதிய புகைப்படமும் வெளியிடப்படவில்லை. இதனால் கிம் ஜோங் உன் 'காணாமல் போனதாக' உள்நாட்டு ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டன.
இதனிடையே, வட கொரியாவின் முக்கிய அரசு நிகழ்ச்சியான முன்னாள் அதிபரும் கிம் ஜோங் உன்-னின் தந்தையுமான கிம்-2 சங்கின் நினைவு தின நிகழ்ச்சியிலும் கிம் ஜோங் பங்கேற்கவில்லை. ஆனால் நினைவு இடத்தில் கிம் ஜோங் உன் பெயரில் மலர் வளையம் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை குறிப்பிட்டு அதிபர் கிம் ஜோங்கின் சார்பாக நினைவிடத்துக்கு, மலர் வளையம் அனுப்பப்பட்டதாக அந்நாட்டு அரசின் ஊடகமான கே.சி.என்.ஏ-வில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டின் முக்கிய அரசு நிகழ்ச்சியும் கிம்மின் குடும்ப நிகழ்விலும் அவர் பங்கேற்காமல் போனதும், அதற்கான காரணமும் முறையே தெரிவிக்கப்படாததும் வட கொரிய நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு காயம் ஏற்பட்டு, அதனால் அவருக்கு தொடர்ந்து மூட்டு வலி இருப்பதாகவும், உடல் நலக் குறைவால் அவர் வெளியே வரமாட்டார் என்று அந்த அரசு சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது அரசு சார்ந்த பணிகளை அதிபரின் இளைய சகோதரி கிம் யோ ஜங் மேற்கொள்கிறார் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.
அதிபரின் இளைய சகோதரியான கிம் யோ ஜங், அதிகம் மக்களால் அறியப்படாதவர் ஆவார். மக்கள் மட்டும் இல்லாமல், அவர் குறித்த புகைப்படங்களோ, சரியான விவரங்களோ வட கொரியாவில் பெரும்பாலானோருக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
கிம் யோ ஜங், கடந்த மார்ச் மாதம் வட கொரிய ராணுவத்தின் மூத்த அதிகாரியாக பதவியேற்றார். ஆண்கள் மட்டுமே பதவி, பொறுப்புகளை நிர்வகித்து வரும் வட கொரியாவில் அரசு குடும்பத்திலிருந்து பெண் ஒருவர் பொறுப்பில் வருவது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும், கிம் யோ ஜங் ஆளுமை மிக்கவராக உருவாகலாம் என்று அப்போது கூறப்பட்டது.
தொடர்ந்து சில மாதங்களில் கிம் யோ ஜங் பொறுப்புகளை கவனிப்பதும், அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மூட்டு வலிக்காக முற்றிலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து அதிபர் மாயமானது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதிபர் காணாமல் போன குழப்பம் ஒருபுறம் இருக்க, வட கொரியாவில் குடும்ப அரசியல் குழப்பம் இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால், எதிரி நாடான தென் கொரியா இந்தச் சமயத்தை பயன்பபடுத்தி தங்கள் நாட்டின் மீது போர் நடத்தக் கூடும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போல கடந்த 2012-ஆம் ஆண்டிலும் அதிபர் கிம் ஜோங் உன் காணாமல் போனார். அப்போது சரியாக 23 நாட்களுக்கு எந்த ஊடகத்திலோ, அரசு நிகழ்ச்சிகளிலோ அதிபரின் பங்கேற்பு இருக்கவில்லை. அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து அதிபர் பொது நிகழ்ச்சிகளில் தோன்றினார். அப்போது, டால்பின் கண்காட்சிக்கு அவர் சென்றிருந்ததாக செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.