உலகம்

நான் புனிதரோ தெய்வப் பிறவியோ அல்ல! - ஆங் சான் சூகி பேச்சு

செய்திப்பிரிவு

‘நான் புனிதரும் அல்ல, தெய்வப் பிறவியும் அல்ல, நேர்மையான அரசியல்வாதி மட்டுமே’ என்றார் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வியாழக்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:

மியான்மர் இன்னும் முழுமை யான ஜனநாயக நாடாக மாற வில்லை. ஜனநாயகம் வலுப்பெற இப்போதுள்ள சட்ட சாசனத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் ராணுவ தலைமைத் தளபதியின் ஆதரவு இல்லாமல் எந்த சட்ட சாசனத்தையும் திருத்தவோ, மாற்றவோ முடியாது.

உலக அரங்கில் மியான்மர் ஜனநாயக நாடாக உருவெடுக்க ராணுவத் தலைமையும் ஒத்துழைக்க வேண்டும். ராணுவத்தை என்னால் வெறுக்கவே முடியாது. ஏனென்றால் அந்த ராணுவத்தை உருவாக்கியது எனது தந்தை.

என்னைப் புகழ்ந்து பேசும்போது புனிதர் என்றோ, தெய்வப் பிறவி என்றோ குறிப்பிடுவதை நான் விரும்புவது இல்லை. நான் ஒரு சாதாரண அரசியல்வாதி. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நேர்மையான அரசியல் வாதி என்றார்.

பிரதமருடன் சந்திப்பு

சிட்னி பயணத்தை முடித்துக் கொண்டு கான்பெராவுக்கு சென்ற ஆங் சான் சூகி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டை சந்தித்துப் பேசினார். அப்போது, மியான்மரில் முழுமையான ஜனநாயகம் மலர ராஜ்ஜியரீதியில் ஆஸ்திரேலியா உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டோனி அபோட், மியான்மரின் ஜனநாயகப் போராட்டத்தில் ஆங் சான் சூகி பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர் என்று புகழாரம் சூட்டினார். ஆங் சான் சூகி பேசியபோது, ஆஸ்திரேலிய தொழிலதிபர்கள், மியான்மரில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ராணுவ ஆட்சி நடைபெற்ற மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடிய ஆங் சான் சூகி சுமார் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார். உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT