உலகம்

அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை சித்தரிக்கும் கண்காட்சி: முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இந்திய-அமெரிக்கர்களின் மரபு பண்பு, தினசரி வாழ்க்கை முறை மற்றும் பல்வகை பங்கேற்பை சித்தரிக்கும் வரலாற்றுச் சின்னங்கள் அடங்கிய கண்காட்சி முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் நிறுவனம் சார்பில் வரலாற்றை சித்தரிக்கும் தேசிய அருங்காட்சியகம் உள்ளது. வரலாறு மற்றும் இந்தியர்களின் அரசியல், தொழில் மற்றும் கலாசார பங்கேற்பு தொடர்பான சாதனைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத் தின் ஒரே ஒரு இந்திய வம்சாவளி உறுப்பி னர் அமி பேரா கூறுகையில், "இங்கு வசிக்கும் இந்தியர்கள், அமெரிக்க வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர். ஸ்மித்சோனியன் நிறுவனம் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அதை அருங் காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் நிரந்தரமாகக் குடியேறிய இந்தியர்களின் அன்றாட வாழ்க்கை முறை, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் செய்த சாதனைகள் மற்றும் தலிப் சிங் சாவுந்த் என்பவர் ஆசிய பிராந்தியத்திலிருந்து முதன்முறையாக கடந்த 1956-ல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது உள்பட பல்வேறு சாதனைகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தியரான நயீம் கான் வடிவமைத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி அணிந்த ஆடை, 1985-ல் ஸ்பெல்லிங் போட்டியில் முதல் பரிசை வென்ற இந்தியர் பாலு நடராஜன் மற்றும் 2004 ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மோஹினி பரத்வாஜ் பற்றியும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியைஅடுத்த ஒரு வருடத்துக்கு பொதுமக்கள் பார்வையிட முடியும். பின்னர் ஸ்மித் சோனியன் நிறுவனத்தின் பயணக் கண்காட்சியாக, நாடு முழுவதும் உள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் சமுதாய மையங்களில் இவை காட்சிக்கு வைக்கப்படும். இது 2015 மே முதல் 5 ஆண்டுகளுக்கு நடைபெறும்.

SCROLL FOR NEXT