கத்தார் மீது வளைகுடா நாடுகள் விதித்துள்ள தடை நல்லதல்ல என்றும், கத்தார்வுடனான துருக்கியின் உறவு தொடரும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் அங்காரவில் கத்தார் மீதான தடை குறித்து அதிபர் எர்டோகன் பேசும்போது, "கத்தார் மீதான வளைகுடா நாடுகளின் தடை நல்லதல்ல என்று நாங்கள் நினைக்கறோம். கத்தாரை தனிமைப்படுத்துவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாது. எங்களது துயரமான நேரங்களில் எங்களுக்கு கத்தார் நண்பர்கள் துணையிருந்துள்ளனர். கத்தாருடனான துருக்கியின் உறவு தொடரும்" என்றார்.
கத்தாருக்கான ஆதரவு தெரிவித்து எர்டோகன் பேசும்போது சவுதி மீது எந்த குற்றச்சாட்டையும் அவர் வைக்கவில்லை. வளைகுடா நாடுகளுடன் நல்ல நட்புறவை துருக்கி பேணி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.