உலகம்

அகதிகளுக்கு அமெரிக்கா தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் அகதிகள் தஞ்சமடைய தடை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அகதிகளுக்கு தடை விதிக்கும் ஆணையில் அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டார்.

அதன்படி சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர மாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும். மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் உத்தரவால் சிரியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் கோர முடியாது. இந்தப் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிபர் ட்ரம்ப் கூறியபோது ‘வெளிநாட்டு தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக குடியேற்ற, அகதிகளுக்கான கொள்கை யில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தை நவீனப்படுத்தி புதிய விமானங்கள், போர்க்கப்பல்களை வாங்க வகை செய்யும் ஆணையிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

கிறிஸ்தவர்களுக்கு விதிவிலக்கு

முன்னதாக செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியபோது, மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். கொடூர மாக கொலை செய்யப் படுகின் றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று தெரிவித்தார். எனவே அகதிகள் விவகாரத்தில் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 10 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது. நடப்பு 2017-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்ள ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ட்ரம்பின் நடவடிக்கையால் அகதி களுக்கான வாசல் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி. கமலா ஹாரிஸ் கூறியபோது, இது அகதிகளுக் கான தடை அல்ல, முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட தடை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதே போல ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மலாலா மனவேதனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியபோது, வன் முறையால் தாய்நாட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், தாய்மார்களுக்கான கதவை அதிபர் ட்ரம்ப் அடைத்துள்ளார். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT