உலகம்

அமெரிக்க அழகியாக முதன்முறையாக இந்திய பெண் தேர்வு

செய்திப்பிரிவு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நைனா தவுலுரி (24) 2014ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியர் ஒருவர் அமெரிக்க அழகியாக தெர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

அமெரி்க்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிப் போட்டி, நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள அட்லான்டிக் சிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவுலுரிக்கு கடந்த ஆண்டின் அமெரிக்க அழகி மலோரி ஹகன் பட்டம் சூட்டினார்.

இவர்கள் இருவருமே நியூயார்க் அழகியாக இருந்து அமெரிக்க அழகியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அமெரிக்க அழகி பட்டத்தை தொடர்ந்து 2ஆவது ஆண்டாக நியூயார்க் கைப்பற்றி உள்ளது.

பட்டம் வென்ற பின்னர் மஞ்சள் நிற மாலை கௌன் அணிந்தபடி விழா மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்த துவுலுரி, பார்வையாளர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து தவுலுரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இந்தப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

இந்த அழகிப் போட்டியில் 53 பேர் போட்டியிட்டனர். துவ்லுரிக்கும், இரண்டாம் இடம் பிடித்த கிறிஸ்டல் லீக்கும் (கலிபோர்னியா அழகி) இடையே கடும் போட்டி நிலவியது. இவர்கள் இருவருமே ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்லஹாமா அழகி கெஸ்லி கிறிஸ்வொல்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

நேர்காணல், அறுவுக்கூர்மை, திடீர் கேள்விக்கு பதில் அளிக்கும் விதம், மாலை கௌன் மற்றும் நீச்சல் உடையுடன் கூடிய தோற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நடுவர்கள் அமெரிக்க அழகியை தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினி ஜூலி சென், தனது கண்களை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்து போட்டி நடுவர்கள் தவுலுரியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் "என்னைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் சிகிச்சை தேவையற்றது. ஆனால், இது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது" என பதில் அளித்தார். போட்டியின்போது, தவுலுரி நாட்டுப்புற மற்றும் பாலிவுட் நடனமாடி தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த பட்டத்தை வென்றதன் மூலம், தவுலுரிக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.32 லட்சம் கிடைக்கும். இதை தனது மேல்படிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார். தனது தந்தையைப் போல பிரபல மருத்துவர் ஆக வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது தந்தை பயட்டிவில்லியில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக உள்ளார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் ((மூளை சார் அறிவியல்) பெற்றுள்ள தவுலுரி, கடந்த 15 ஆண்டுகளாக இந்திய நடனத்தைப் பயின்று வந்துள்ளார்.

SCROLL FOR NEXT