பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட லாகூர் நகரில் இன்று (புதன்கிழமை) நடத்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண செய்தித் தொடர்பாளர் மாலிக் முகமது கான் கூறும்போது, "லாகூரின் ராணுவ பாதுகாப்பு பகுதியில் இன்று (புதன்கிழமை) நடந்த குண்டுவெடிப்பில் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இதில் 18 பேர் காயமடைந்தனர். தற்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை" என்றார்.
இந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்து லாகூர் போலீஸ் அதிகாரி, "இளம் தீவிரவாதி ஒருவர் ராணுவ வாகனத்துக்கு அருகே வந்து தன் உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்" என்று கூறினார்.